நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்திருந்தது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 34 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவு செலவுத்திட்டத்துக்கு அப்பால் மற்றுமொரு மினி வரவு --செலவுத்திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக்கொண்டு சமர்ப்பிக்கச் செய்தமை மேலும் பெறுமதி சேர் வரியை அதிகரித்தது போன்ற விடயங்களுக்காக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ளனர்.
நல்லாட்சி அரசின் அமைச்சரொருவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராகவே முதல் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர். ஆனால் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அப்பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுக்கவில்லை. அதனால் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையும் என்பது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு நன்கு தெரியும்.
இருந்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசாங்கத்தை விமர்சிக்க அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தை பெறுகின்றனர். அரசாங்கம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு வரும் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆளும் தரப்பைச்சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயமாக பாராளுமன்றத்துக்கு வருகை தரவேண்டுமென்றும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்ப வேண்டுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான பணிப்புரை விடுத்துள்ளார். 8 ஆம் திகதி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் மாலை 2.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மே தினத்தின் போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்திருந்த கிருலப்பனை கூட்டம் பிசுபிசுத்துப் போனதையடுத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சோர்வடைந்து போயிருந்தனர். அந்த சோர்வைப்போக்கி மீண்டும் கட்சியினருக்கு உத்வேகத்தை ஏற்படுத்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உதவுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நம்புகின்றனர்.
சச்சின்வாஸ் --- மஹிந்த ரகசிய சந்திப்பு
பல்வேறு மோசடிக்குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட மஹிந்த ராஜபக் ஷவின் நெருங்கிய உறவான சச்சின்வாஸ் குணவர்தன திடீரென மைத்திரி தரப்புக்கு தாவினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலப்பிட்டிய தொகுதி அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல்கள் மோசடிகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் சச்சின்வாஸ் குணவர்தனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்த 31 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பை யொஹான் ரத்வத்த ஏற்பாடு செய்ததாகவும் அவரது வீட்டிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் பின்னணியில் ஏதாவது சூழ்ச்சி இருக்கலாமெனவும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
கடந்த மஹிந்த ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 32 வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இருந்தும் சச்சின் வாஸ் குணவர்தன மைத்திரி தரப்புக்கு மாறி அரசு தரப்பு சாட்சியாக மாறிய பின்னர் அவர் மீதான விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஊழல் மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து அதிருப்தி
அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பதவிக்கு கொண்டு வருவதற்கு கோட்டே விகாராதிபதி அமரர் மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் சிவில் சமூக அமைப்புகள் தொழிற்சங்கங்கள் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து செயற்பட்டன. மஹிந்த ஆட்சியில் ஊழல் மோசடி அதிகரித்துக் காணப்படுவது குறித்தும் இதிலிருந்து நாட்டை மீட்டுக்கொள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மஹிந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அப்போது இவர்கள் மேடைகளில் முழக்கமிட்டனர்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார். புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். மஹிந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. விசாரணைகள் ஆரம்பமாகின. பலர் மீது விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவுற்ற பின்னர் 26 கோவைகள் வழக்கு தொடருவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆனால் இதுவரை ஒரு வழக்காவது தொடரப்படவில்லை.
நல்லாட்சிக்கான அமைப்பு இந்த விடயம் குறித்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இருந்தும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததையிட்டு அந்த அமைப்பு அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைக்காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வழக்கை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் பதவிகளை வழங்கி அழகு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மஹிந்த ஆட்சியில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளராகவிருந்தவர் அனுஷ பெல்பிட்ட. பணிப்பாளர் சபையில் பதவி வழி உறுப்பினராக முன்னாள் ஜனாதிபதியின் லலித் வீரதுங்க இருந்தார். இந்த இருவரும் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றிக்காக தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபாவுக்கு இப்புடவைகளை கொள்வனவு செய்தது தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இருந்தும் அனுஷ பெல்பிட்டவுக்கு நல்லாட்சி அரசாங்கம் அமைச்சொன்றில் மேலதிக செயலாளர் பதவி வழங்கியுள்ளது. இப்போது இவ்விடயம் தொடர்பாக பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஷிராந்தியின் ஹோட்டல் கட்டணம் செலுத்துவது யார்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக் ஷ 2014 ஆம் ஆண்டு வெசாக் கொண்டாட்டங்களைக் கண்டு களிப்பதற்காக பிரான்ஸ் நகருக்கு சென்றிருந்தார். அப்போது இவர் பிரான்ஸிலுள்ள ஆடம்பர ஹோட்டலொன்றில் தங்கியுள்ளார். இந்த ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு கட்டணமாக 2573746 ரூபா அறவிடப்படுகின்றது.
ஷிராந்தி ராஜபக் ஷவுடன் சென்றவர்களும் இந்த ஹோட்டலில் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் அளவிலான அறைகளை பயன்படுத்தியுள்ளனர்.
ஷிராந்தி ராஜபக் ஷ குழுவினர் தங்கிய ஹோட்டல் கட்டணத்தை இந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்திலேயே ஷிராந்தி ராஜபக் ஷ குழுவினரின் ஹோட்டல் கட்டணங்களை செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சாதாரண வர்த்தக விமானமொன்றிலேயே பயணம் செய்துள்ளார். இவர் பிரத்தியேக விமானத்தில் செல்லாததன் காரணமாக இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தக விமானமொன்றில் சிங்கப்பூருக்குச் சென்று அங்கு நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்து அதன் பின்னர் ஜப்பானுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். இதன் காரணமாக பெருந்தொகைப்பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்,
நன்றி வீரகேசரி














No comments: