“யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க நீயோ அடிமை இல்லையடி உன் மனதில் உன் சுதந்திரம் உண்டு நீயே உணர்ந்து கண்டுபிடி" என்ற வரியை மிக அழுத்தமாகச் சொல்கிற படம்தான் “இறைவி”. தலைமுறைகள் கடந்தாலும், நவீன உலகினுள் புகுந்தாலும் இன்றும் ஆண்களை சகித்துக்கொண்டு வாழும் பெண்களுக்காக, அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் உடல் ரீதியான கஷ்டங்கள், மன வேதனைகள், வலிகள் இதனை பிரதிபலிப்பதற்காக, பெண்மைக்காகவென்றே ஒரு படம் இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
குடிகார கணவனால் மனரீதியில் வேதனைப்படும் கமலினிமுகர்ஜி, கோபப்பட்டு உணர்ச்சிவசத்தால் தவறுசெய்யும் கணவனால் தன் சின்னச் சின்ன ஆசைகளையும் கனவுகளையும் நனவாக்க முடியாமல் துடிக்கும் அஞ்சலி, கணவனின் ஆணாதிக்கத்தால் கோமாவிற்குச் செல்லும் வடிவுக்கரசி, கணவனை இழந்து தன் வாழ்க்கையைத் தானே செதுக்கிக் கொள்ளும் பூஜா திவாரியா என்று சில பெண்களுக்கான வாழ்க்கையைச் சுற்றிச் சுழலும் கதையும், அவர்கள் சார்ந்த ஆண்களால், அந்தப் பெண்கள் எடுக்கும் முடிவுகளுமே இறைவி.
குடிகாரனாகவே குடித்தனம் நடத்தியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தன் படத்தை வெளியிட மறுக்கும் தயாரிப்பாளருடன் சண்டையிடுவதாகட்டும், மனைவியை இழந்துவிடுவோமோ என்ற விரக்தியில் புலம்புவதாகட்டும் நடிப்பு அவ்வளவு லாவகமாக கைவருகிறது அவருக்கு. குடிகாரனாகவே இருந்து விட்டு, ஒரு காட்சியில் குடிக்காமலே குடிகாரனைப் போல நடிப்பார்.. அப்போது உண்மையாகவே குடித்துவிட்டு வந்ததற்கும், குடித்ததாய் நடிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பித்திருப்பார். அதே போலவே அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் வசனம் பேசும்போது, முகம் முழுவதும் நடிக்கிறது. நடிப்பு மட்டுமல்ல, நடனம், பாடல் என்று பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தில், கதைக்கடுத்த நாயகன் - நீங்கள்தான்! ஹாட்ஸ் ஆஃப் ப்ரோ!
விசுவாசத்திற்காக உணர்ச்சிவசப்பட்டு பொங்குகிற கேரக்டரில் சரிவரப் பொருந்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. வழக்கம் போலவே அவர் டயலாக் மாடுலேஷனும் கைகொடுத்திருக்கிறது. ஆனால், இனி வேறுபாடு காண்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது விஜய்சேதுபதிக்கு. பாபிசிம்ஹாவைப் பார்க்க மனமின்றி ஒதுங்கிச் செல்லும் காட்சியில் - வெரிகுட் வாங்குகிறார்.
கமலினி முகர்ஜி, அஞ்சலி இருவரது நடிப்பும் மிகச்சரியாக அவர்கள் கதாபாத்திரத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு பெண்ணுக்காக எதையும் செய்யத் துணியும் பாபிசிம்ஹா, சில காட்சிகளே வந்தாலும் கெத்து காட்டியிருக்கும் பூஜா தேவரியா, ராதாரவி, கருணாகரன் என்று ஒவ்வொரு கேரக்டர் தேர்வும் அதன் நடிப்பில் அவர்கள் பொருந்திய விதமும் சிறப்பு.














No comments: