பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 150 கோடி டாலர் கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து ஐ.எம்.எப். வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச சூழ்நிலைகளால் அந்நாட்டின் பொருளாதாரம் தற்போது நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
இதனை எடுத்துக் காட்டும் வகையில், கடந்த ஆண்டில் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 131லிருந்து 147-ஆக வீழ்ச்சி கண்டது.
இதனை தடுப்பதற்காக அந்நாட்டின் மத்திய வங்கி ரூ. 20,000 கோடியை செலவிட்டது. இதனால், அன்னியச் செலாவணி கையிருப்பு 2015-இல் வெகுவாக வீழ்ச்சி கண்டது. இது, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சர்வதேச நிதியம், இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வர உதவிடும் வகையில் 150 கோடி டாலர் கடனுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 16.8 கோடி டாலர் மதிப்பிலான கடனுதவி உடனடியாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை காலாண்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆறு கட்டங்களாக வழங்கப்படும்.














No comments: